ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கிய செல்போனுக்கு வட்டி கட்ட நாவல் பழம் விற்பனை பிளஸ் 2 மாணவிக்கு உதவிய அமைச்சர் பெரியகருப்பன்

0

சிவகங்கை

ஆன்லைன் வகுப்பிற்காக கடன் பெற்று வாங்கிய செல்போனுக்கு வட்டி கட்ட நாவல் பழம் விற்று வந்த பிளஸ் 2 மாணவிக்கு ஓராண்டிற்கான கல்வி செலவை அமைச்சர் பெரியகருப்பன் ஏற்றுக் கொண்டு நிதியுதவி வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நைனாப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மாணிக்கம். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகள் அஞ்சுகா. இவர் கானாடுகாத்தான் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் உயிரிழந்த நிலையில், மஞ்சுளா கூலி வேலைக்கு சென்று மகளை படிக்க வைத்து வந்தார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக அஞசுகா, ரூ.10 ஆயிரம் வட்டிக்கு வாங்கி செல்போன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை மாதம் 1,200 என்ற வீதம் 12 மாதங்களில் செலுத்துவதாக கூறி பணம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் செல்போனுக்கு வட்டி கட்டுவதற்காக, மாணவி அஞ்சுகா, அதிகாலை அங்குள்ள மரங்களில் நாவல் பழங்களை சேகரித்து அதனை காரைக்குடி – கானாடுகாத்தான் சாலையில் அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறார். மேலும், வியாபாராத்தின் இடையே ஆன்லைன் வகுப்பலும் பங்கேற்று வந்தார். மாணவியின் இந்த செயல் தொடர்பான செய்தி நாளிதழில் வெளியாகியது. இதனை அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாணவியின் ஒரு வருட கல்வி செல்விற்கான தொகையை நேற்று கட்சி நிர்வாகிகள் மூலம் மாணவியின் வீட்டிற்கு சென்று நேரில் வழங்கினார்.

மேலும், மாணவியும் செல்போனில் பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவரது மேற்படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்தார். அமைச்சரின் இந்த செயலால் இன்ப அதிர்ச்சியடைந்த மாணவிஅஞ்சுகா மற்றும் அவரது தாயார் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here