12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடக்குமா?..2 நாளில் முடிவு…

0

புதுடில்லி:பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசு, தன் பதில் மனுவை தாக்கல் செய்யும் என்பதால், தேர்வு நடக்குமா என்பது பற்றிய விபரம், இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு, மே 4ல் துவங்கி, ஜூன் 14 வரை நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா இரண்டாவது அலையால்,இந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. ஆலோசனைதேர்வுகளை நடத்துவது குறித்து, மாநில கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அதில் பங்கேற்ற தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், ‘பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்தலாம்’ என, தெரிவித்தன.மாநிலங்களின் பரிந்துரைகளை, மே 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி, மத்திய அரசு கூறியிருந்தது.

அதனடிப்படையில் தேர்வுகளை நடத்துவது குறித்து, ஜூன், 1ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஆகியவை ஆலோசனை நடத்தி வருகின்றன.வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யலாமா என்பது குறித்து சி.பி.எஸ்.இ., ஆராய்ந்துவருகிறது.’தேர்வை ரத்து செய்யாமல், ஏற்கனவே பரிந்துரைத்தபடி, தேர்வு நேரத்தை குறைத்து, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா’ என்பது குறித்தும், சி.பி.எஸ்.இ., ஆலோசித்து வருகிறது.மாற்று ஏற்பாடாக, 9, 10, பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண்களை நிர்ணயிக்கலாமா என்ற வாய்ப்பு குறித்தும், அதன் சாதக பாதகங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வழக்கு இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், மாணவர், பெற்றோர், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த மம்தா சர்மா என்ற பெண் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.நிலைப்பாடு இதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அரசின் நிலைப்பாடு அதில் இடம்பெறும்.சி.பி.எஸ்.இ., எடுக்கும் முடிவைப் பொறுத்தே, மாநில கல்வி வாரியங்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடும். அதனால், பிளஸ் 2 தேர்வு நடக்குமா அல்லது ரத்தாகுமா என்பது குறித்து, இன்று ஒரு தெளிவான முடிவு தெரியவரும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here