ஷாக்..! தமிழ்நாட்டில் மீண்டும் உயர தொடங்கிய கொரானா..

0

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 1986 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலம் முழுவதும் உள்ள 23 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கைக் கூடுதல் தளர்வுகள் இல்லாமல் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று மாநிலத்தில் 1.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 12 வயதுக்கு உட்பட்ட 104 சிறார்கள் உட்பட மொத்தம் 1986 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 25,59,597 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மாநிலத்தில் இன்று மொத்தம் 26 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 19 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 9 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள் ஆகும். மேலும் 50 வயதுக்குக் குறைவான 7 பேரும் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,076 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் 20,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர இன்று மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 2,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,04,805 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாகத் தஞ்சை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 2.5% ஆகவும் சேலம் மற்றும் திருச்சியில் பாசிட்டிவ் விகிதம் 2.2%ஆகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.2% ஆக உள்ளது.

இன்றும் கோவை மாவட்டத்தில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இன்று 246 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 27ஆம் தேதி வைரஸ் பாதிப்பு 109ஆக குறைந்திருந்த நிலையில், இன்று 204 பேருக்கு தலைநகரில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிரச் செங்கல்பட்டு (122), ஈரோடு (165), தஞ்சை (124) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.

அதேநேரம் நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்று 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் திருப்பூரில் 6 பேரும், சேலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 24 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பலியாகவில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here