நாளை முதல் அடுத்த கல்வியாண்டு தொடக்கம்.3.8 கோடி புதிய பாடபுத்தகங்கள் அனுப்பி வைத்தது அரசு..மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க ஆலோசனை!

0

சென்னை: நாளை முதல் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், 3.8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் குடோன்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை, மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு மற்றும் தமிழக சட்டப் பேரவை தேர்தல் பணிகளுக்கு மத்தியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவை கழகம், அடுத்த (2021-22) கல்வியாண்டிற்காக கிட்டத்தட்ட 3.8 கோடி பாடப்புத்தகங்களை அச்சிட்டுள்ளது. இதுவரை, 91% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் குடோன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறுகையில், ‘எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் 100% அச்சிடப்பட்டுள்ளன.

மற்ற வகுப்புகளுக்கு முழுமையாக இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர், தொடக்கப்பள்ளிகளில் நிலுவையில் உள்ள பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் ஆண்டாக இருந்ததால், முன்கூட்டியே திட்டமிட்டு கடந்த ஜனவரி தொடங்கி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 12 மையங்களுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பி வைத்தோம்.

பாடங்களில் பெரிய அளவிலான திருத்தங்கள் எதுவும் இல்லாததால், அச்சிடும் பணி முன்கூட்டியே தொடங்கியது. பன்னிரெண்டாம் வகுப்புக்கான முதல் மற்றும் இரண்டாவது தொகுதி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி அடுத்த வாரம் தொடங்கும். தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை விநியோகம் செய்யும் விஷயத்தில், பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள் எதுவும் வரவில்லை. ஆன்லைன் கற்றலுக்கு வசதியாக, முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடப்புத்தக தொகுப்பை வழங்க இந்த கல்வியாண்டில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பாடத் தொகுப்பும் தயாரிக்கப்பட்டது.

எனவே, தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு, 2021-22ம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை மாணவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை தங்கள் ஆசிரியர்கள் மூலம் வழங்கவும், மாணவர்களின் நிலையை கவனிக்கவும் வேண்டும். முகக் கவசங்கள் மற்றும் பிபிஇ கிட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பணியமர்த்தும் போது, அவரது உடல்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றனர்.

அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம் விநியோகம் குறித்து தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறுகையில், ‘தனியார் பள்ளிகள், அரசு ஏற்பாடு செய்துள்ள குடோன்களுக்கு சென்று பாடப்புத்தகங்களை எடுத்து வர அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், அடுத்த கல்வியாண்டிற்காக, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தேவைப்படுகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு, அவரவர் வீட்டிற்கே சென்று பாடப் புத்தகங்களை வழங்கும் திட்டத்தில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறினார். நாளைமுதல் (ஜூன் 1) அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்றால் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது கேள்வியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here