அலர்ட் ஆன பள்ளிக்கல்வித்துறை!! அன்பில் மகேஷ் அதிரடி!

0

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வணமாக ஆன்லைன் கிளாஸ் எடுப்பது, மாணவிகளுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது, நள்ளிரவில் வீடியோ கால் செய்வது என புகார் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இதுகுறித்த புகார்களை பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு, 14 நாட்கள் காவலுடன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- பள்ளி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை இவ்வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணை நடத்திய பின்பு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை யாரும் பின்பற்றவில்லை என்பது இவ்விவகாரம் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், மீண்டும் ஒருமுறை வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். பாலியல் குற்றச்சாட்டு புகார்களை பதிவு செய்ய/விசாரிக்க ஒரு குழு அமைக்க அரசு ஆலோசித்துள்ளதாக கூறிய அவர், ஒரு நல்ல ஆசிரியரும் இதுபோன்ற புகார்களால் பாதிக்க கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளதாகவும் கூறினார். ஆன்லைன் வகுப்புகளில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என்பதே இச்சம்பவத்திற்கு பின்பு தான் தெரியவந்துள்ளதாக கூறிய அவர், இது எங்களுக்கு ஒரு பாடம் என்றும், ஆதலால் இனிவரும் நாட்களில் நாங்கள் கவனமாக செயல்படுவோம் எனவும் உறுதிப்பட தெரிவித்தார். நாங்களும் இதுப்போன்ற பாதிப்பை சந்தித்து உள்ளதாக முன்னாள் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்றும், அவர்கள் நேரடியாக வந்து புகார் தெரிவித்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் சி.பி.எஸ்.இ பள்ளியில் பணிபுரிவதால், மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்ட அவர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் விசாக கமிட்டி அமைக்க அரசு ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here