தடை செய்யப்பட்ட தாது மன்னனுடன் வீ.வீ நிறுவனத்தைச் சார்ந்த 5 லாரிகள் பறிமுதல்

0

சீல் வைத்த குடோனில் எடுத்து வரப்பட்டதா?
* தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி. விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள வி.வி.

டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேற்று மதியம் லாரிகளில் இல்மனைட் தாது மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது 5 லாரிகளிலிருந்து தாது மணல் மூடைகளை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து லோடுடன் ஒரு லாரியையும், மணல் இறக்கப்பட்ட 4 லாரிகளையும் பிடித்து சிப்காட் காவல்நிலையம் கொண்டு வந்தனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள வி.வி.மினரல் நிறுவனத்திற்கு சொந்தமான தாது மணல் குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் தூத்துக்குடி வி.வி.டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு தடை செய்யப்பட்ட தாது மணல் கொண்டு வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குநர் சட்டநாத சங்கர், தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை, புவியியல் அலுவலர் சுகிர்தா ரஹீமா உள்ளிட்டோர் வி.வி.டைட்டானியம் தொழிற்சாலைக்கு சென்று சோதனை நடத்தி, அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்தனர்.

இந்த தாது மணல் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டபோது அங்கிருந்தவர்களால் சரியான பதில் கூறமுடியவில்லை. இதனால் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட குடோன்களில் சீலை உடைத்து தாது மணல் எடுத்து வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தாது மணலின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆவணங்கள் சேகரிப்பு
தாதுமணல் கொள்ளை நடப்பதாக கூறிய வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் தென்மாவட்டத்தில் உள்ள தாது மணல் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவை வி.வி நிறுவனத்திற்கு சொந்தமானது. குடோன்கள் சீல் வைக்கும் போது எவ்வளவு தாது மணல் இருந்தது என்பது குறித்து கணக்கெடுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அதற்குரிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனால், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அதிகாரிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த தாது மணல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here