குழந்தைக்கு அறுவை சிகிச்சை பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை

0

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்து கொண்ட போலந்து நாட்டை சேர்ந்த மரியா ஆண்ட்ரேஜ்சிக் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 வாரத்திற்குள்ளே தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய முதல் ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார்.

இது குறித்து தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பதிவிட்டுள்ள மரியா, 8 மாத குழந்தையான மினோசெக் மாயிசாவுக்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டுவதற்காகவே அதை ஏலமிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில், ‘இதைப் பற்றி சிந்திக்க நான் நீண்ட நேரம் செலவிடவில்லை, நான் சந்தித்த முதல் நிதி திரட்டல் இதுதான், அது சரியானது என்று எனக்குத் தெரியும்,’ என்று தெரிவித்துள்ளார்.

போலந்து நாட்டை சேர்ந்த மினோசெக் மாயிசாவுக்கு சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரது பெற்றோர் பேஸ்புக் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதை பார்த்த மரியா ஆன்-லைன் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட்டார். இந்த பதக்கத்தை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது. அந்த பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார்.

அதேநேரத்தில் இந்த ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய அந்த தனியார் நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டியுள்ளோதோடு, அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.

2016ம் ஆண்டு பிரேசிலின் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இரண்டு சென்டிமீட்டர் வித்தியாசத்தில் பதக்கத்தை இழந்திருந்தார் மரியா என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here