பொன் ஓணம் வந்தல்லோ – கோரான பரவலையும் தாண்டி கேரளாவில் களை கட்டும் பண்டிகை

0

திருவனந்தபுரம்: கொரோனா பரவலையும் தாண்டி ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையும் பூக்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.

தளர்வுகளுடன் பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பொது இடங்களில் அதிகம் கூடாமல் வீடுகளில் பண்டிகை கொண்டாட கேரளா மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை நாளில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கேரளாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை, அறுவடைத் திருநாள் என்றும் அழைப்பர். ஓணம், ஆயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை. இந்த வரலாற்றுச் செய்தி, கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில் விவரமாக பொறிக்கப்பட்டுள்ளது.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். வீட்டின் முன்பு, பெண்கள் 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.

கேரளாவில், ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இந்தக் காலத்தில் வரும் ஓணத் திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக்கொண்டு வருவர்.

பூக்கோலத்தில் அதைத்தான் முதலில்வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து 10-ம் நாள், பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். 10ஆம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்று அழைக்கப்படும். நான்காம் நாள் விசாகம், ஐந்தாம் நாள் அனுஷம் ஆறாம் நாள் கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும்.

நாளைய தினம் உத்திராடம் திருநாள் கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமையன்று திருவோண திருவிழா கொண்டாடப்படும். ஓணம் கொண்டாட்டத்துடன் இந்த விழா முடிவடைகிறது. ஓணம் பண்டிகை நாளில் கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடைகளை உடுத்தி இறைவனை வழிபடுகின்றனர்.

ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சனிக்கிழமையன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், செப்டம்பர் 11ஆம் தேதி பணி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here