வரலாற்றில் சிங்கம்பட்டி ஜமீன்

0

நாட்டின் கடைசி மன்னரான சிங்கம்பட்டி ஜமீன் குறித்த சில வரலாற்றுத் தகவல்களை தற்போது பார்ப்போம்..திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் சிங்கம்பட்டி. இங்கு ஆயிரம் ஆண்டு கால வரலாற்று நினைவுகளை சுமந்தபடி, 5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது ஜமீன் அரண்மனை. இங்குள்ள அருங்காட்சியகத்தில், ஜமீன்தார்களின் பழங்கால உடைகள், சிங்கம்பட்டி ஜமீனுக்கு குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், மன்னர் கால பொருட்கள் ஆகியவை காட்சிக்கு

வைக்கப்பட்டுள்ளன.

1952-ல் ஜமீன் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்படும் வரை, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், சுமார் 74,000 ஏக்கர் நிலம், சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்தது. தற்போது அரண்மனையும், எஞ்சிய சில ஏக்கர் விளைநிலம் மட்டுமே உள்ளது. அம்பாசமுத்திரத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளி ஆகியவற்றை கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவை தீர்த்தபதி என அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், 8,374 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டும், சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதாக இருந்தது. ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ், இந்த இடமும் அரசுக்கு சொந்தமானது.

தந்தை இறந்துவிட்ட நிலையில், 1934-ம் ஆண்டு 3 வயதிலேயே, சிங்கம்பட்டி ஜமீனாக முருகதாஸ் தீர்த்தபதி முடிசூட்டப்பட்டார். கல்வி கற்க இலங்கைக்கு அனுப்பப்பட்ட அவர், குதிரையேற்றம், சிலம்பம், வாள்வீச்சு, வர்மக்கலை, துப்பாக்கிச்சுடுதல் போன்றவற்றையும் கற்றுத்தேர்ந்தார். சொரிமுத்து அய்யனார் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழாவில், சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, பாரம்பரிய வழக்கப்படி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார்.

சிங்கம்பட்டி ஜமீன் குறித்த வரலாற்று காட்சிகள், 2018-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா” படத்தில் இடம்பெற்றிருந்தது. கடந்த 2011-ல் பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன்” படத்தில், சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்தும் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கோயில் உட்பட 8 கோயில்களை, சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி, பரம்பரை அறங்காவலராக நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983-ம் ஆண்டு ஈழப் பிரச்னை உச்சக்கட்டத்தில் இருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உதவி புரிந்தார். இதையடுத்து, பாபநாசம் மலைப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைப்பது குறித்து ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அந்த இடத்தை பார்வையிட்டதாகவும், அப்போது அவருக்கு தனது அரண்மனையில் விருந்தளித்து, சிங்கம்பட்டி ஜமீன் உபசரித்ததாகவும், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக விவசாயத்தை கவனித்து வந்த முருகதாஸ் தீர்த்தபதி, சென்னையில் கான்டிராக்ட் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். எனினும், சொந்த ஊர் மீதான பாசத்தால் சிங்கம்பட்டிக்கே திரும்பிய அவர், சிறிது காலம் எல்ஐசி முகவராகவும் இருந்தார். அந்தவகையில், முருகதாஸ் தீர்த்தபதி தனக்கான செலவுகளை, சொந்த வருமானத்தில் இருந்தே கவனித்துக் கொண்டார்.

நாட்டின் பட்டம் சூட்டப்பட்ட கடைசி மன்னர் என்ற முறையில், அவரது மரணத்துடன் ஜமீன் வரலாறும் நிறைவு பெற்றுவிட்டது எனலாம். எனவே, இனி சினிமாவிலும் அவர் தொடர்பான சர்ச்சைகள் வேண்டாம் என்பதே, சிங்கம்பட்டி மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here