நேரடியாக நுரையீரலுக்குள் நுழைகிறது குமரியில் ஊடுருவிய உருமாறிய கொரோனா: கொத்து, கொத்தாக பரவும் அபாயம்

0

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உருமாறிய கொரோனா பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. நேரடியாக நுரையீரலை தாக்கி, ஊடுருவுவதால் பாதிப்பை கண்டறிவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவ தொடங்கி உள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களை மீண்டும் தாக்கி வரும் கொரோனா, குமரி மாவட்டத்திலும் மெல்ல, மெல்ல பரவல் தன்மையை அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மனநல காப்பகம் ஒன்றில், 46 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்றும் மாவட்டம் முழுவதும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மீதி 23 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக நாகர்கோவிலில் 10 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. சுகாதாரத்துறையினர், மாநகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் தேர்தல் பணியில் தீவிரமாக இருப்பதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல் கட்ட கொரோனா தொண்டை பகுதியில் ஊடுருவி, 4 நாட்கள் கழித்தே நுரையீரலுக்குள் நுழையும் தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது உருமாறி உள்ள கொரோனா, நேரடியாகவே நுரையீரலுக்குள் நுழைகிறது. இதனால் சளி, காய்ச்சல் வருவதற்கு முன்பே அதன் தாக்கம் அதிகரித்து விடுகிறது. நுகரும் தன்மையில் எந்த பாதிப்பையும் முதலில் தராத நிலையில், கடுமையான உடல் வலி, மூட்டு வலி போன்றவை தான் இதன் அறிகுறி என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். மொத்தமாக, மொத்தமாக பாதிப்பு அதிகரிப்பதால், இனி வரும் நாட்களில் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும். மேலும் கைகளை சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் டாக்டர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

2வது டோஸ் கண்டிப்பாக போட வேண்டும்
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தடுப்பூசி போட்டால் கண்டிப்பாக கொரோனா தொற்று ஏற்படாது என கூற முடியாது. 81 சதவீதம் பயனளிக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் தாக்கம் குறைவாக இருக்கும். மேலும் 2 வது டோஸ் போட்ட 14 நாட்கள் கழித்தே அது முழுமையாக பயனளிக்கும். எனவே முககவசம் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி ஆகியவற்றை கடை பிடிக்க வேண்டும். முதல் டோஸ் போட்டவர்கள், கண்டிப்பாக 2 வது டோஸ் போட வேண்டும். அப்போது தான் தடுப்பூசியின் பலன் முழுமையாக கிடைக்கும் என்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here