தென்காசி மாவட்டத்தில் 2ம்கட்ட அலை பரவல் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்

0

தென்காசி:தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டத்தில் தற்போது 2ம்கட்ட கொரோனா அலைவீசத் தொடங்கியுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்த அனைத்து துறையினரும் கூட்டு முயற்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவிப்பதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாததாலும் சமீப காலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது.

அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை உடனே தீவிரப்படுத்தவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்திடவும், காய்ச்சல் முகாம்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் எனவும் கொரோனா வார்டுகளில் படுக்கை எண்ணிக்கை உடனடியாக அதிகப்படுத்தப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகள் முழுவதும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும், நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள், சுபகாரியங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணிபுரிபவர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி படுத்தவேண்டும். முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது. தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கேற்ப தடுப்பூசி போடுவதன் ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்யவேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி திருமண நிகழ்வுகளில் 100பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலம் 50பேருக்கு மிகாமலும் நடைபெறலாம். வருவாய்த்துறையினர் தலைமையில் இந்நிகழ்வுகளை ஆய்வு செய்திட வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள், நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருத்துவமனையிலோ அல்லது வீடுகளிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தானாகவே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று உறுதியானால் அவரது குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் சமுகஇடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here