‘ உங்கள் தொகுதியில் முதல்வர் ‘ திட்டத்தில் 3,750 கோரிக்கைக்கு தீர்வு!

0

உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 3,750 மனுக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் 12 பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வு மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வுகாண்பதற்காக ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற துறை உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பெறப்பட்ட 4.20 லட்சம் மனுக்களும் மாவட்டம், வகை வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில், முதல்கட்டமாக எடுக்கப்பட்ட 1.52 லட்சம் மனுக்களில் 54,095 மனுக்களுக்கு தீர்வு காணும்பணி பல்வேறு நிலைகளில் பரிசீலனையில் உள்ளது. 57,845 மனுக்கள் மீது கள ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் வருவாய்த் துறை 1,626,ஊரக வளர்ச்சித் துறை (வீடு கட்டுதல்) 88, ஊரக வளர்ச்சித் துறை அடிப்படை கட்டமைப்பு பணி 548, சென்னை பெருநகர மாநகராட்சி 236, சென்னை குடிநீர் வாரியம் 261,தமிழ்நாடு மின்வாரியம் 575, நகராட்சிகள் மற்றும் இதர துறைகள் 416 என 3,750 மனுக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த 3,750 மனுதாரர்களில் 12மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here